கொண்டி – ஒரு
சொல்லாய்வு
வாணி அறிவாளன்
கொண்டி என்பது சங்க இலக்கியங்கள்வழி அறியலாகும் ஒரு பழந்தமிழ்ச்சொல் ஆகும். தற்காலத்தில் கதவைத் தாழ்போட உதவும் தாழ்ப்பாளைக் குறிக்கவே பயன்படுத்தப்பெறும் இச்சொல் சங்ககால இலக்கியங்களில் வெவ்வேறு
பொருண்மைகளில் கையாளப்பெற்றுள்ளன. அகராதிகள், கொண்டியின் சங்க இலக்கியப்
பொருண்மைகளாகக் கொள்ளை, பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல், உணவு, கப்பம், மிகுதி, களவு, பரத்தை ஆகிய பொருள்களைக் கூறியுள்ளன. சங்க இலக்கிய உரையாசிரியர்கள் கொண்டி
என்ற சொல்லிற்குப் பெரும்பாலும் கொள்ளை என்றே பொருள் கொண்டுள்ளனர். ஆனால் கொண்டி
என்ற சொல் பயின்று வந்துள்ள சங்க இலக்கியச் செய்யுள்களைக் கற்கும்போது அகராதியாளர்கள் கூறியுள்ள சில
பொருண்மைகளும், உரையாசிரியர்கள் கூறும் கொள்ளை என்ற பொருண்மையும் முற்றிலும்
தவறானவை என்ற கருத்து புலப்பட்டது. மேலும் அகராதியாளர்களும் உரையாசிரியர்களும்
உரைக்காத சில பொருண்மைகளிலும் கொண்டி எனும் இச்சொல் ஆளப்பெற்றுள்ளமையும்,
அப்பொருண்மைகளிடையே ஒரு பொதுத்தன்மை காணப்பெற்றதையும் அறியமுடிந்தது. எனவே சங்க இலக்கியச்
சான்றுகளைக் கொண்டு கொண்டி எனும்
இப்பழந்தமிழ்ச் சொல்லுக்குரிய
1. தவறான பொருளுரைகளை மறுப்பதுவும்
2. நேரிய பொருளுரைகளுடன் இதுகாறும் அறியப்பெறாத
பொருண்மைகளை உரைப்பதுவும்
3. அவற்றிற்கிடையே அமைந்துள்ள பொதுத்தன்மையை
உரைப்பதன்மூலம் கொண்டியின் பொருளாழத்தை விவரிப்பதுவும் இக்கட்டுரையின் நோக்கங்கள்.
கொண்டியின் பொருள் கொள்ளையா?
சங்க இலக்கிய உரைகளில் உரையாசிரியர்கள் பெரும்பாலும்
கொண்டி என்ற சொல்லுக்குக் கொள்ளை என்றே பொருளுரைத்துள்ளன. ஆனால் சங்க இலக்கியச் செய்யுள்களை வாசிக்கும்போது கொண்டி என்ற சொல்லைக் கொள்ளை என்ற பொருளில் புலவர்கள் யாண்டும் கையாளவில்லை என்பதனை அறியமுடிகிறது. பகைநாட்டை நிலைகுலையச் செய்து,
அந்நாட்டுப் பொருள்களைப் படையெடுத்து வந்தவர்களே கவர்ந்து சென்ற செல்வத்தைக் கொண்டி என எந்த இலக்கியமும் குறிக்கவில்லை.
கொள்ளை என்றால் என்ன என்பதைப் புரிந்துகொண்டால்தான்
கொண்டிக்கும் கொள்ளைக்குமான பொருள் வேறுபாட்டையும் புரிந்துகொள்ளமுடியும். வஞ்சினம் உடைய வேந்தர் சிலர் மாற்றான் திறை கொடுத்தாலும் கொள்ளாது கடும்போர் புரிவதுவும் உண்டு. இதனை
அருந்திறை கொடுப்பவும் கொள்ளான் சினம்சிறந்து
வினையின் பெயர்க்கும் தானை
புனைதார் வேந்தன் பாசறை
யேமே! - அகம்.
84
என அகநானூறு விளக்குகிறது. இவ்வாறான போர்களில் சினம்கொண்ட வேந்தர் பகைநாட்டைப் பாழாக்கி, அந்நாட்டின் நல்ல பொருள்கள் அனைத்தையும் தாமே அள்ளிச்செல்வர்.
இச்செயலைக் ‘கொள்ளை’
என்ற சொல்லால் குறித்தனர். கரிகாற்பெருவளத்தான் அவ்வாறு பகைநாட்டைக் கொள்ளையிட்டமையால் அந்நாட்டில் நல்ல பொருள்கள் எதுவுமே
இல்லாமல் போனதைப்
……. ………
……… பகைவர்
ஊர்சுடு விளக்கத்து
அழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை
ஆகலின், நல்ல
இல்ல ஆகுபவால் ……… ……… -
புறம். 7
என ஒரு புலவர் குறிப்பிட்டுள்ளார். முறையாகப் பெறும் திறையைவிடப் பகைநாட்டை நிலைகுலையச் செய்து தாமே அள்ளிச் செல்லும் செல்வம் மிகுதியாகவே இருக்கும் என்பதால் அளவற்றுப் பெருவாரியாகக் கொள்ளப்பெற்ற இச்செல்வத்தைக் கொள்ளை என்ற சொல்லால் குறித்தனர். ஏனெனில் கொள்ளை என்ற சொல் மிகுதி என்ற பொருளிலேயே சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் கையாளப்பெற்றுள்ளது.
(நற்.183:2,
352:6, அகம்.140:2,
267:7, புறம்.
386:16, பெரு.64,
மது.256, பட்.266, மலை.317). தற்காலத்திலும் பேச்சுவழக்கில், ‘மிகுதி’ என்பதைக் குறிக்கக் கொள்ளை என்ற சொல் பயன்படுத்தப்பெற்று வருகிறது.(எ.கா. தோட்டத்தில் மிளகாய் கொள்ளை கொள்ளையாய்க் காய்த்திருக்கிறது, வீட்டில் கொள்ளைத் தேங்காய் இருக்கிறது). ஆனால் கொண்டிக்குரிய ஒத்த சொற்களாகக் கொள்ளை, மிகுதி என்ற சொற்களையும் அகராதிகள் தந்துள்ளன. மிகுதியும் கொண்டியும் ஒரே
பொருளுடையன எனில்,
கொண்டி மிகைபடத் தண்தமிழ் செறித்து - பதி. 63:9
எனப் புலவர் ஏன் கூறவேண்டும்? ஆகவே கொள்ளையும் மிகுதியும்தான் ஒத்தசொற்கள் ஆகும். மேலும் கொள்ளைச் செல்வத்தைக் கொண்டு சென்றவர் ‘கொள்ளையர்’ எனப்பெற்றனர். ஆனால் கொண்டிச் செல்வத்தைக் கொண்டு சென்றவர் கொண்டியர் ஆகார். கொடுக்கும் நிலையில் உள்ள செல்வத்திற்கு உரிய கொடையாளரே கொண்டியர் எனப்பெற்றனர்(புறம். 338). அதாவது செல்வத்திற்கு உரியவர்
கொண்டியர் என்பதும், பிறர் செல்வத்தைக் கவர்பவர் கொள்ளையர் என்பதும் தெளிவாயின. மேலும் கொள்ளை என்பது தொழிற்பெயராகவோ அல்லது மிகுதி என்ற
பொருளில் அடைச்சொல்லாகவோ மட்டுமே பயின்றுவரும் தன்மையது. ஆனால் கொண்டி என்பது ஒரு
வகைச் செல்வத்தைக் குறிக்கும் பொருட்பெயராகவே இலக்கியங்களில் ஆளப்பெற்றுள்ளமை
இங்கு எண்ணத்தக்கது. எனவே கொண்டியும் கொள்ளையும் ஒத்த பொருளுடைய சொற்களல்ல.
கொண்டிவேறு,
கொள்ளைவேறு என்பது தெளிவானமையால் கொள்ளைக்கு நிகர்ச்சொற்களான மிகுதியும் களவும்கூட
கொண்டிக்குரிய பொருள்களாகா. செல்வத்திற்கு
உரியவர் கொடுத்த செல்வமே(திறையே) கொண்டி எனக் குறிக்கப்பெற்றுள்ளது. பகைநாட்டை நிலைகுலையச் செய்து, அந்நாட்டுப் பொருள்களைப்
படையெடுத்து வந்தவர்களே கவர்ந்து சென்ற செல்வத்தைக் கொண்டி எனச் சங்க இலக்கியம்
குறிக்கவில்லை.
கொண்டி –
திறை:
திறை என்ற பொருளைக் குறிக்கக் கொண்டி எனும் சொல் ஏழு
இடங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ளது. பெரும்பாலும் போர்கள்
பிறநாட்டாரின் செல்வத்தைக் கவர்வதற்காகவே மேற்கொள்ளப்பெற்றன. பின்பு போர்கள் முறைப்படுத்தப்பெற்றதன் விளைவாகப் படையெடுத்து
வந்தவரின் தலைமையை ஏற்றுப் பணிந்து,
தாமே முன்வந்து திறை அளித்த நாட்டாரிடம் போரைத்
தவிர்த்தனர்; இச்செய்தியைக் குடவாயில் கீரத்தனாரின்
வந்துவினை முடித்தனன் வேந்தனும்; பகைவரும்
தம்திறை கொடுத்துத் தமர்ஆ யினரே
முரண்செறிந் திருந்த தானை இரண்டும்
ஒன்றுஎன அறைந்தன பணையே - அகம்.44
என்ற அகநானூற்றுப் பாடலடிகள்
தெரிவிக்கின்றன. படையெடுத்து வந்தவனின் தலைமையை ஏற்றுத் தாமே முன்வந்து, ‘கொள்க’ என அளித்த திறையைக் கொண்டி எனக் குறித்துள்ளனர். இதனை
ஐயூர் முடவனார் எனும் புலவர், தம் புறநானூற்றுப் பாடலில்
……….. ………
……….. போரெதிர்ந்து
கொண்டி வேண்டுவன் ஆயின், கொள்கெனக்
கொடுத்த மன்னர்
நடுக்கற் றனரே - புறம். 51
எனப் பதிவு செய்துள்ளார்.
தம் தலைமையை ஏற்காது பணிந்து திறைசெலுத்தாத மன்னரைப் போரால்
பணித்து அவரிடமிருந்து செல்வத்தைப் பெற்றனர். அவ்வாறு பணித்துப்பெற்ற செல்வமும்
கொண்டி
என்றே குறிப்பிடப்பெற்றுள்ளது. இதனைத்
தண்தமிழ் வரைப்பகம் கொண்டி யாகப்
பணித்துக் கூட்டுண்ணும் தணிப்பு அருங் கடுந்திறல் - புறம். 198
என
வடமவண்ணக்கண் பேரிசாத்தனாரும்
பொருநனும் இளைஞன்; கொண்டியும் பெரிதென
எள்ளி வந்த வம்ப மள்ளர் - புறம். 78
என இடைக்குன்றூர்கிழாரும்
பாடிய புறநானூற்றுப் பாக்கள் அறிவிக்கின்றன. கடற்படையைக் கொண்டு படையெடுத்து வெற்றிபெற்றுக் கொணர்ந்து வந்த சோழனின் செல்வத்தைக் கோவூர்கிழார், ‘கடற்படை அடற்கொண்டி’ (புறம். 382) என்கிறார். ஆக, பணிவால் கொள்க எனக் கொடுத்த அல்லது படைவலிமையால் வெற்றிகொண்டு பணித்துப்பெற்ற
பிற
நாட்டாரின்
செல்வத்தைக்
கொண்டி
எனப்
புலவர்கள் குறித்துள்ளனர்.
கொண்டி – பரிசில்:
திறைப்பொருளை மட்டுமின்றி வேந்தரோ மன்னரோ புலவர்க்குக் கொடுத்த
பரிசிற் பொருளையும் கொண்டி என வழங்கினர். இதனைப்
பகடு தரு செந்நெல் போரொடு நல்கிக்
கொண்டி பெறுகென் றோனே …….. - புறம். 390
என்ற அவ்வையின் பாடலடிகள் காட்டுகின்றன. இப்பாடலில் அதியமான், அவ்வையுடன் வந்த புலவர் சுற்றத்திற்குத் தான் வழங்கிய செந்நெற்போர் உள்ளிட்ட
பரிசிலைக் கொண்டி எனக் கூறியுள்ளான்.
சங்ககாலத்தில் அரசர்கள் புலவர்கட்குப் பெருமதிப்பளித்தனர்; அரசர்களால் முதன்மைப்படுத்தப்பெற்றனர்.
எனவே அரசர்களால் கொள்க எனப் பணிந்து புலவர்க்குப் பரிசில் வழங்கப்பெற்றது. கரிகால்வளவன் புலவர் பெருமக்களுக்குப் பணிவுடன், கொள்க
எனக்கூறிக் கொடை அளித்த முறைமையைத்
துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு
பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க! - பொரு. 125, 126
என்ற பொருநராற்றுப்படை அடிகள் காட்டுகின்றன. புறநானூற்றுக்
காஞ்சித்திணைப் பாடல் ஒன்றும் பரிசிலைக் கொள் எனக் கொடுத்தமையை
இழைகிளர் நெடுந்தேர் இரவலர்க்கு அருகாது
கொள்என விடுவை
ஆயின்
எனத் தெரிவித்துள்ளது. எக்காலத்தும் பரிசிலைப் பணிவன்புடன்
வழங்குவதே பண்பாடாகக் கருதப்பெறும். எனவே கொள்க என வழங்கப்பெற்ற பரிசிலையும்
கொண்டி என்றனர்.
வல்வில் ஓரியிடம் பரிசில் கடாவியபோது ஈதலுக்கும் கொடுத்தலுக்குமான
பொருள்வேறுபாட்டைப் கழைதின் யானையார் என்னும் புலவர் பாடிய அருமையான புறநானூற்றுப்
பாடல் பின்வருமாறு.
ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
|
ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
|
கொள்ளெனக் கொடுத்த
லுயர்ந்தன் றதனெதிர்
கொள்ளேன்
என்றல் அதனினும் உயர்ந்தன்று
- புறம். 204
|
கொண்டி-சீர்
மகட்பாற்காஞ்சிப்
பாடல் ஒன்றில் ஓர் எயில் மன்னனின் ஒரே மகளைப் பெருஞ்சீர் அருங்கொண்டியள் என
ஒரு புலவர் குறிப்பிட்டுள்ளார் (புறம். 338). அம்மன்னனின் பெருஞ்செல்வமனைத்தும்
அவன்தன்மகளை மணம் செய்துகொள்பவனுக்கே சேரும் என்பதால் பெருஞ்சீர் என்றனர்.
அக்கிழத்தியைக் கொண்டியள் எனக் குறித்தமை ஏன்? இதற்கான காரணத்தைக்
கற்பு எனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரி மரபின் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே -
தொல்.1088
எனத் தொல்காப்பிய நூற்பா பகர்கிறது. ஆம். தலைவியைச்
சார்ந்தோர் கொடைக்குரியோர்; தலைவனின் சுற்றத்தார் கொளற்குரி மரபினோர். கொடைக்குரியோர்
கொள்க எனப் பணிந்து கொடுத்தலே மரபு. திருமணத்திற்கான பெண்ணுக்குரிய சீரைப்
பணிவன்புடன் கொள்க எனக் கொடுக்கும் வழக்கம் இன்றுவரை இருந்துவருகிறது. எனவே கொள்க
எனக்கொடுக்கப்பெற்ற சீரையும் கொண்டி எனக் குறித்துள்ளனர்.
ஆனால்
மகட்பாற்காஞ்சிப் போர்கள் பெரும்பாலும் வேந்தருக்கும் வேந்தருக்குப் பணியாத
மறவாழ்வு வாழ்ந்த தொல்குடி மன்னருக்கும் இடையே நடைபெற்றவை. தொல்குடிமன்னர் மற்ற
மன்னர் போன்று பணிந்து திறை செலுத்துவதை விரும்பமாட்டார். வேந்தரையே பணிந்து திறை
செலுத்தச் செய்யும் மறமுடையவர் என்பதற்குக் கொண்கானங்கிழானை
நிறையருந் தானை வேந்தரைத்
திறைகொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே -புறம்.156
எனப் பாடிய மோசிகீரனாரின் பாடலடிகள் சான்று பகர்கின்றன.
மேலே விவரிக்கப்பெற்ற மகட்பாற்காஞ்சிப்பாடலிலும் மன்னன் தன் மகளையும் பெருஞ்சீரையும் பணிந்து வேந்தர்க்குக் கொடுக்க
விரும்பாமையே போர்க்காரணமாக காட்டப்பெற்றுள்ளது. எனவே தன் மகளுக்குச் சீராகத்
தரவிருந்த செல்வத்தைப் பணிந்து கொண்டியாகத் தரமாட்டான்; மறமும்
தொல்குடிப்பெருமையும் உடைய தாமே மேம்பட்டவர் எனக் கருதியமையால் தம்மைப் பணிந்து
வந்து கேட்பவருக்கே ஈகுவான் என்பதனைக்
கொற்ற வேந்தர் வரினும், தன்தக
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் -
புறம். 338
எனப் புலவர் அதே பாடலில் தெரிவித்துள்ளார். இப்பாடலிலும்
பணிந்து வணங்குபவர்க்குத் தருவது ஈகையெனக் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
கொண்டி- உணவா?
கொண்டிக்கு உணவு என்ற பொருளையும் அகராதிகள் தந்துள்ளன.
கொண்டிக்கு உணவு என்று பொருள்கொள்ளக் காரணமாகிய மதுரைக்காஞ்சி அடி பின்வருமாறு.
கட்கொண்டிக் குடிப்பாக்கத்து (மது. 137)
இம்மதுரைக்காஞ்சி அடிக்கு ‘கள்ளையே உணவாகக் கொள்வோர் வாழும்
குடிகளையுடைய பாக்கம்’ எனப் பொருள் கொண்டமையால் கொண்டிக்கு உணவென்ற பொருளையும்
அகராதியாளர் குறித்துள்ளனர். அதனால் உணவெல்லாம் கொண்டி எனல் தவறு. இதுகாறும்
விளக்கப்பெற்றவாறு கொள்க என விருந்தினர்க்குக் கொடுக்கப்பெற்ற உணவையே கொண்டி என்றனர்.
ஆம். திறையையும், பரிசிலையும்,மணமுறைச் சீரையும்பணிந்து ‘கொள்க’ என அளிக்கும்
முறைமை போன்று விருந்தினர்க்கான விருந்துணவையும் பணிவன்புடன் ‘கொள்க’ என அளித்தல்
பண்பாடு. பொருநராற்றுப்படையில் கரிகாற்பெருவளத்தான் இரவலரான பொருநரிடம் உணவைக்
கொள்க என இரந்து நின்ற பண்பை, ‘அவிழ்ப்பதம் கொள்க என்று இரப்ப’ (பொரு.113) எனப்
புலவர் காட்சிப்படுத்தியுள்ளார். பாணர் முதலான விருந்தினர் ஐவகை நிலங்கள்வழிச்
செல்லும்போதும் ஒவ்வொரு நிலமக்களும் எவ்வகை உணவுகளைக் கொடுத்து விருந்தோம்புவர்
என்பதனைக் கூறுமிடத்து நெய்தல்நில மக்கள் கள்ளை விருந்துணவாகக் கொடுப்பரென்ற
செய்தியை
நுதிவேல் நோக்கின், நுளைமகள் அரித்த
பழம் படு தேறல் பரதவர்
மடுப்ப,
............
........... ..........
வற்ற் குழற் சூட்டின், வயின் வயின் பெறுகுவிர் - சிறுபாண்.158-163
எனச் சிறுபாணாற்றுப்படையும்,
வல்வாய்ச் சாடியின் வழைச்சுஅற விளைந்த
வெந்நீர், அரியல் விரல்அலை, நறும்பிழி
தண்மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் -பெரும்.280-282
எனப் பெரும்பாணாற்றுப்படையும் மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளன. எனவே,
கள்ளையே விருந்துணவாகத் தரும் வழக்கம் கொண்டிருந்த பரதவர் குடியைக் கட்கொண்டிக்
குடிப்பாக்கம் என மாங்குடி மருதனார் குறிப்பிட்டுள்ளார். ஆதலால் கொள்க என
அளிக்கப்பெற்ற விருந்துணவே கொண்டி என வழங்கப்பெற்றமை தெளிவாயிற்று.
|
கொண்டி மகளிர்:
பத்துப்பாட்டு இலக்கியங்களான மதுரைக்
காஞ்சியிலும் (583) பட்டினப்பாலையிலும்(246) என இரு இடங்களில் கொண்டி மகளிர் என்ற
சொல்லாட்சி கையாளப்பெற்றுள்ளது. கொண்டி மகளிர் என்பவர் யாவரெனில் ‘கொள்க’ எனத் திறைப்பொருளாகக் கொடுக்கப்பெற்ற
ஆடல் மகளிர்(அ) நாடக மகளிர் ஆவர். சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவனின்
இமயப்படையெடுப்பை விவரிக்கும் இளங்கோவடிகள், ‘சேரன் படை சென்ற வழியிலிருந்த
நாடுகளை ஆண்ட குறுநில மன்னரெல்லாம் பணிந்து திறை அளித்த பொருள்களைப்
பட்டியலிடும்போது
நாடக
மகளிர்ஈர் ஐம்பத் திருவரும்
கூடிசைக்
குயிலுவர் இருநூற்று எண்மரும் -
சிலம்பு.கால்கோள்:128,129
என முதல் திறைப்பொருளாக, உயர்திணையினரான நாடக மகளிரைத்
திறைப்பொருளாகக் குறிப்பிட்டுள்ளார். பகைநாட்டில் பெறப்பெற்ற திறைப்பொருளைத் தம்
நாட்டிற்குத் தேரில் கொண்டு வருவர். எனவே அகநானூறு இம்மகளிரைப்
போர்செறி மள்ளரிற் புகுதரு மூரன்
|
||
தேர்தர வந்த தெரியிழை நெகிழ்தோள்
|
||
ஊர்கொள் கல்லா மகளிர் தரத்தரப்
|
||
பரத்தைமை தாங்கலோ விலனென வறிதுநீ
|
||
புலத்தல் ஒல்லுமோ மனைகெழு மடந்தை -அகம். 316:7-10
|
||
தீம்பெரும் பொய்கைத்
துறைகேழ் ஊரன்
|
||
தேர்தர வந்த நேரிழை மகளிர் -அகம். 336:11,12
|
||
என்றவாறு பாக்களில்
தேர்தர வந்த நேரிழை மகளிர் என்று குறிப்பிட்டுள்ளது. ஆதலால் ‘கொள்க’
எனக் கொடுத்தமையால் திறைப்பொருளாகக் கொண்டு வரப்பெற்ற நாடக மகளிர் அல்லது தேர்தர
வந்த மகளிரையே கொண்டி மகளிர் எனப் பத்துப் பாட்டு குறித்துள்ளது. கொண்டி மகளிரைப் பரத்தையராகவும் இலக்கியங்கள்
குறிப்பிட்டுள்ளமையால் கொண்டிக்கு அகராதியாளர்கள் பரத்தை என்றும் தவறாகப்
பொருளுரைத்துள்ளனர். ‘கொள்க’ எனக் கொடுக்கப்பெற்றுத் திறைப்பொருளாகக் கொண்டு
வரப்பெற்றமையால் மட்டுமே கொண்டி மகளிர் எனக் குறிக்கப்பெற்றனர் என்பதால்
அவர்களுடைய பரத்தமைக் குணத்தைக் கொண்டு கொண்டிக்குப் பரத்தை எனப் பொருள் கூறல்
மிகத்தவறு.
கொண்டி மல்லர்:
கொண்டி மகளிரைப் போன்று கொண்டி மல்லர் என்ற பெயரீடும் வழங்கப்பெற்றமையை
வீழாக்
கொள்கை வீழ்ந்த கொண்டி
மல்லன் மார்பு மடுத்தனன் -நற். 174.8,9
என நற்றிணையும்
கொண்டி மள்ளர் கொல்களிறு பெறுக - பதிற்.43:25
எனப் பதிற்றுப்பத்தும் தெரிவிக்கின்றன. (மங்கலம் என்ற சொல் மங்களம் என்றும் வழங்கப்பெறுமாறு
மல்லரை மள்ளர் என்றும் வழங்கும் வழக்கமிருந்ததை மேற்கண்ட இலக்கியங்கள் தெளிவுறுத்துகின்றன).
மல்லர் எனப்பெறுபவர் ஆயுதங்களின்றித் தம் கைகளால் போர்புரியவல்ல மறவர்
ஆவர். மற்போர் ஆடும் மறவரில் எவரொருவர் வானை நோக்கியவாறு மல்லாந்த
நிலையில் வீழ்த்தப்பெறுகின்றனரோ அவர் மற்போரில் தோற்றவராகக் கருதப்பெறுவர்.
எனவே சிறந்த மற்போர் மறவர் வீழாத கொள்கையுடையவராய் விளங்குவர்.
மற்போரில் வீழாத கொள்கையுடைய இம்மல்லர் போர்விருப்பத்தால் பணிந்து தம்மை
ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியமையால் மள்ளரை நற்றிணை, வீழாக் கொள்கை
வீழ்ந்த கொண்டி மல்லன் (நற்.174:8,9) எனக்
குறிப்பிட்டுள்ளது.
இவ் அருந்திறல்
போர்மறவரைக் கொண்டி மள்ளர் எனக் குறிப்பிடக் காரணமாவது, போர்க்கள வாழ்வையே விரும்பிய இம்மள்ளர் போர்விருப்புடன்,
ஒரு நாட்டிற்குரிய போர்மறவராக மட்டும் போரிடாது, போர் விருப்புடைய வேந்தரிடம் சென்று தம்மை அவர்தம் படையினராகக் கொள்ளுமாறு
பணிந்து வேண்டுவது வழக்கம். இதனை
ஆடுபெற்று அழிந்த மள்ளர் மாறி,
‘நீ கண்டு அனையேம்’ என்றனர்; நீயும்
நும்நுகம்
கொண்டுஇனும் வென்றோய் - பதிற்.63:13-15
எனப் பதிற்றுப்பத்து தெளிவுற இயம்பியுள்ளது. திறை அளிக்கும் மன்னர் திறைப்பொருளாகப் படைகளையும்
மறவர்களையும் அளிக்கும் மரபிருந்தது என்றாலும், மள்ளர் தாமே முன்வந்து
தம்மைக் கொள்க எனத் தாழ்ந்துவணங்கி வேந்தர்தம் படைகளில் இணைத்துக் கொண்டமையால் இவர்களைச்
சிறப்பாகக் கொண்டி மல்லர் என்றனர். ஆனால் வீழ்ந்த கொண்டி எனும் சொற்றொடரைத்
தவறாகப் புரிந்துகொண்டமையால் சென்னைப் பேரகராதி, கொண்டியைப் பரத்தை எனக்
குறித்தமைக்கு இச்சொற்றொடரைத் தவறான மேற்கோள் சான்றாகக் காட்டியுள்ளனர்.
கொண்டிக்கான பொருண்மைகளின் பொதுத்தன்மை:
சங்க இலக்கியத்தைப் பொறுத்தவரை
கொண்டி எனும் சொல் திறை, பரிசில், விருந்து உணவு, திருமணச்சீர் ஆகிய பொருள்களைக்
குறிப்பதற்குப் பதிலாகவே கையாளப்பெற்றுள்ளது. கொண்டிக்குரிய இந்நான்கு
பொருண்மைகளும் கொள்க எனக் கொடுக்கப்பெற்றவை. எப்பொருளையும் கொடுக்கும் நிலையினரைக்
கொடையாளர் என்பது தொல்காப்பியக் கோட்பாடு. (தொல். 1088). கொடையாளர் தாம்
கொடுக்கும் பொருளைக் கொள்க எனப் பணிவன்புடன் அளித்தலே உயர்ந்த பண்பு. இதனைத் தொல்காப்பியர்தம் எச்சவியல் நூற்பாக்களில் தெளிவுபடுத்துகிறார்.
ஒருவன் மற்றவனிடமிருந்து பொருளைக் கேட்டுப்பெறுவதற்குப் பயன்படுத்தும் சொற்களாக ஈ, தா, கொடு என்ற மூன்று
சொற்களைக்கூறியதோடு அச்சொற்கள் எவர்எவர் கூற்றுகளில் அமையும் என்பதனையும்
ஈ
என் கிளவி இழிந்தோன் கூற்றே -
தொல். 928
தா
என் கிளவி ஒப்போன் கூற்றே - தொல்.
929
கொடு என்
கிளவி உயர்ந்தோன் கூற்றே - தொல். 930
என அருமையாக விளக்கியுள்ளார். மேற்கூறப்பெற்றவற்றில் இறுதி நூற்பாவை விளக்குவது ஈண்டு மிக இன்றியமையாதது.
கொடு எனக் கேட்கத் தகுதி பெற்றவன் உயர்ந்தவன். அதாவது தன்னைவிட உயர்ந்த நிலையில் உள்ளவர்க்குப் பொருளைக் கொள்க எனத்
தருதல் மரபு. திறையைப் பெற்ற வேந்தரும், பரிசிலைப் பெற்ற புலவரும், திருமணச்சீரைப்
பெற்ற, கொளற்குரி மரபினரான கிழவனைச் சார்ந்தோரும், விருந்தினரும் உயர்ந்தவராகக்
கருதப்பெற்றமையால் கொடையாளர் தாம் கொடுத்த பொருள்களைக் கொள்க எனக் கொடுத்தனர். அதனால்தான்
கொள்க எனப் பணிவன்புடன் கொடுக்கப்பெற்ற திறையும் பரிசிலும் திருமணச்சீரும்
விருந்துணவும் கொண்டி எனக் குறிக்கப்பெற்றன.
அதே பொதுத்தன்மை கொண்ட கொண்டி மகளிரும் கொண்டி மள்ளரும் உயர்திணையினர் என்பதால் அவர்களைக் குறிக்குமிடத்து மட்டும் கொண்டியைத் தனிப்
பதிலீட்டுச் சொல்லாகத் தராமல் கொண்டி அடைமொழியாகச் சேர்க்கப்பெற்று கொண்டி மகளிர்,
கொண்டி மல்லர் எனக் குறிக்கப்பெற்றனர்.
கொள்க எனக்கொடுக்கப்பெற்றமையாலேயே திறையும் பரிசிலும் திருமணச்சீரும் விருந்துணவும் கொண்டி என
ஏன் குறிக்கப்பெறவேண்டும்? கொள்க
எனக்கொடுக்கப்பெற்றமையாலேயே நாடக மகளிரும் மல்லரும் முறையே கொண்டி மகளிர், கொண்டி
மல்லர் என ஏன் சிறப்பிக்கப்பெறவேண்டும்? ஏனெனில் கொள்க என்பதைக் கொண்டீ
என்றும் கூறுவர். இதனைத்
தையால்
தம்பலந் தின்றியோ என்றுதன்
பக்கழித்துக்
கொண்டீ யெனத்தரலும் ...... - கலி. 65: 14
சுறாஅக்
கொடியான் கொடுமையை நீயும்
உறாஅ
அரைசநின் ஓலைக்கண் கொண்டீ - கலி. 147 : 43
எனக் கலித்தொகை குறிப்பிட்டுள்ளது. எனவே கொண்டீ எனத் தரப்பெற்ற திறை, பரிசில்,
திருமணச்சீர், விருந்து உணவு, ஆகியவற்றைக்
கொண்டி என்றும், திறையாகக் கொடுக்கப்பெற்றமையால்
நாடக மகளிரைக் கொண்டி மகளிர் என்றும், போர்விருப்பத்தால்
போர்விருப்புடைய வேந்தரிடம் பணிந்து அவர்தம் படையில் தம்மை இணைத்துக்கொண்டமையால் மள்ளரைக்
கொண்டி மள்ளர் என்றும் வழங்கும் வழக்கம் பிறந்திருத்தல் வேண்டும்.
முடிவுரை:
இக்கட்டுரையின் மூலம் பெறப்பெற்ற புதிய செய்திகள் பின்வருமாறு.
1.
மிகுதி, கொள்ளை,
களவு, பரத்தை என்பன கொண்டிக்குரிய ஒத்த சொற்களாகா.
2.
கொடு என்பது உயர்ந்தோர் கூற்றே என்ற தொல்காப்பிய நூற்பாவின்படி கொள்க எனப் பணிந்து கொடுக்கப்பெற்ற அல்லது கொடு
எனப் பணித்துக் கேட்டுப்பெற்ற பொருள்களனைத்தையும் கொண்டி என்ற சொல்லால் சங்ககால
இலக்கியங்கள் குறிக்கின்றன.
3.
அவ்வகையில் கொள்க எனக் கொடுக்கப்பெற்ற திறையையும், திருமணச்சீரையும், உயர்ந்த பண்புடன் கொள்க எனக் கொடுக்கப்பெற்ற பரிசிலையும், விருந்து உணவையும் கொண்டி என்றனர்.
4.
திறையாகக் கொடுக்கப்பெற்றமையால் நாடக மகளிரைக் கொண்டி மகளிர் என்றனர்
என்ற செய்தியும்
5.
வீழாக் கொள்கையுடைய மள்ளர், போர்விருப்பத்தால் போர்விருப்புடைய வேந்தரிடம்
பணிந்து அவர்தம் படையில் தம்மை இணைத்துக்கொண்டமையால் கொண்டி மள்ளர் எனப்பெற்றனர்
என்ற செய்தியும் இக்கட்டுரையில் விளக்கம்பெற்றன.